Monday, 5 February 2018

ஒரு வினவு!

கொடிதினும் கொடிது இளமையில் வறுமை.

அது முதுகெலும்பை வளைத்து இயல்பை சிதைத்து வாழும் எண்ணம் உடைக்கிறது.

வறுமை மீள எந்த வழியும் இல்லை, வறுமையின் முக்கிய ஆயுதம் பசி. பசித்த வயிற்றை தவிர வேறெப்படியும் வறுமை தன் குரூரத்தை முழுமையாக மனிதனுக்கு உணர்த்த முடியாது/ முயலாது.

பசித்த வயிற்றை உணவைத்தவிர வேறு எதைக்கொண்டு நிரப்புதலும் வீண். செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயட்டும் என்றவன் வற்றிய வயிற்றுடன் ஒரு முழு இரவை கடந்திடட்டும் பார்க்கலாம் என நான் அழுதபடி மனதில் திட்டிய நாள் ஒன்று உண்டு.

பசியை புறம் தள்ளுவோம். எழுதி எழுதி தீர்த்தாலும் பசிக்கும் எனக்கும் அலுக்காது!

வறுமை தனது இரண்டாம்கட்ட எல்லையாக வகுத்திருப்பது அன்பின் வறுமை. வறுமையின் முகங்களில் இது கொஞ்சம் புதிரானது.
போலியான அன்பு
வீணடிக்கப்பட்ட அன்பு
விழலுக்கு இறைத்த அன்பு
பிரசவிக்காமல் மனக்குழியில் புதைந்து போன அன்பு
எல்லைகள் மீறி எதிர்பார்க்கப்பட்ட அன்பு என ஏராளம்..

அன்பு பசி அளவிற்கு குரூரமாக சித்திரவதை செய்வது இல்லை, மாறாக அழகாக கொலை செய்யும் தன்மை கொண்டது.
அது இந்திய இயலாமை கொலையாளிகள் போலல்லாமல் மேற்கத்திய நாடுகளின் சைக்கோக்கள் போல பகட்டான வெளித்தோற்றமும் சிந்தனைக்கு மீறிய அழுத்தமான அசிங்க குரூர முகம் கொண்டது. அடித்து வீழ்த்தி முதுகெலும்பை கூழ்மமாக்கி கொலையான பின்பும் பிணத்தை வதைத்து சிரிக்கும் அது!

காதல், தாய்மை, நட்பு என பலவகை முகங்கள் கொண்டது.

இவை இரண்டை கடந்த மூன்றாம் நிலையில் கற்பனை போலியான வதைமுறை ஒன்று வறுமைக்கு உண்டு. அது ஆட்படுபவரை தவிர கதை கேட்கும் அனேகம் பேரை சிரிக்க வைக்குமளவு வித்தியாசமானது.
காட்டாக காதலிக்கு பரிசுப்பொருள் வாங்க முடியாதது,
பிடித்த உணவை ருசிக்கமுடியாத நாக்கை துடிக்கவைப்பது,
வாகனக்கனவு,
அத்தியாவசியமல்லாத ஆடம்பர ஆசையை மெல்ல மெல்ல வேர்பிடித்து வளரவைத்து வாழ்க்கையை வெறுக்க வைப்பது போலானவை..

மனிதன் எத்தனை கோமாளியானவன் என்றால், முதலிரண்டில் மூர்க்கத்தனமாய் தாக்கப்பட்டு மீண்டெழுந்தாலும் மூன்றாமாவதில் அதிவிரைவாய் விழுந்து அரற்றிக்கொண்டிருப்பான்.
உலகம் முழுவதும் மனிதன் இந்த மூன்றுவகையான வறுமைக்கு எதிராக போராடிக்கொண்டே இருக்கிறான். முற்றிலுமாக அழிக்க அல்ல, தன் எல்லைக்குள் அதன் வேர் ஆகாரம் தேடாத அளவிற்கு போதுமானதாய். அந்த அளவிலேயே சிந்திக்கிறான், உழைக்கிறான், முயற்சிக்கிறான்.

சில தலைமுறைகளுக்கும் சேர்த்து..

ஆனால் நிதர்சனம் ஒன்றே, ஒருபோதும் அவனால் அந்த போரில் வெல்லவே முடியாது.
அதை ஏற்றுக்கொண்டு வாழ்பவன் பைத்தியக்காரன் என நகைப்புக்கு ஆளாவான்.
முடிந்தால் வறுமையை வென்றெடுக்க முயல வேண்டாம், அதுகுறித்து கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன். :)

நான் சிந்தித்த அளவில் இந்த பதிவு எழுத்து வறுமை என்றுதான் தோன்றுகிறது..

Thursday, 18 January 2018

செல்வராகவன்

படைப்பாளிகள் என்ற போர்வை மீது சமீபகால அபத்தங்களால் பெருமளவு கோபம் இருந்தது..

யாதெனில் அவர்கள் தங்களை மட்டுமே இந்த உலகில் வாழ தகுதியானவர்களாக எண்ணிக்கொண்டு காட்டிய பகட்டு..

ஆனாலும் ஆண்டுகள் கடந்தாலும் ஆயிரம் நடந்தாலும், மறு சந்திப்பு ஒன்றில் நம் பால்ய காதல் ஒன்றை “நித்யாவ பாத்தேன் மச்சான்” என்ற ஒற்றை வரியில் நம்முன் நிறுத்தும் நண்பனை போலானது செல்வராகவனின் இந்த நேர்காணல்..

எதற்கும் அலட்டிக்கொள்ளாத பதில்..

எதுகுறித்தும் தீர்க்கமான பார்வை..

அவமானங்கள் நிறைந்த இறந்தகாலம்..

இப்படியெல்லாம் பக்கங்களை நிரப்பி, அபத்தங்கள் குதப்பி அடுக்காத ஒரு நிதர்சன நேர்காணல்..

ஏனென்றால் கேட்பவர் யாராயிருப்பினும் பதில் வரும் திசையில் கேள்விக்கான வீரியம் அறிந்து ஒளி அளந்து படரும் என்பது போலான நேர்காணல்..

(செல்வாவிடம் கேட்க (கற்றுக்கொள்ள) இருப்பது இன்னும் ஏராளம்)

எந்த இடத்திலும் இதுதான் நான் என்ற உத்தரவு தொணி தெறிக்காமல், இவைதான் நான் கண்டவை, கற்றவை என்ற சராசரியாளன் பார்வை, பதில்..

அதுதான் செல்வராகவன்..

இதில் எடுத்துக்கொள்ளலாம் எதற்குமான பதில்..

சரிவர ஆங்கிலம் தெரியாத என் மொழியில் சொல்லப்போனால்,

“This interview is not completed”

“Ideology”

இந்த வார்த்தை எனக்கு துளியும் பரிச்சையமில்லாத ஒன்று, ஆனாலும் முதன்முதலில் இந்த வார்த்தையை நான் கற்றுக்கொண்டது ஒரு படைப்பாளியின் படைப்பை பார்வையாளனாய் நம் பார்வையில் எடுத்துரைப்பது என கொள்ளலாம்..

செல்வராகவன் படைப்புகள் குறித்த ஆயிரம் ஐடியாலஜிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்க, அவற்றை அலசிய பின்னான இந்த நிதர்சன நேர்காணல் ஒரு பிரசாதம்..

ஒவ்வொரு பதிலும் அத்துனை பாமரம், அத்துனை ஆழம், அத்துனை சாமானியம், அத்துனை பாலபாடம்..

யுவன் குறித்த கேள்வி, நாமு அண்ணன் குறித்த கேள்விக்கான பதில்கள் ஒரு சோறு பதம்..

காதல் குறித்த பதில் பொட்டில் அறையும் உண்மை..

சமீபமாய் படைப்பாளி என்ற முகாந்திரம் பெரும்பாலும் பாகுபாடு கலந்தே நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது..

நான் இப்படியான சிந்தனையாளன், என்னை இப்படியாக சிந்திக்கவிட்டால் மட்டுமே இப்படியான படைப்புகள் தருவிப்பேன் என்பது போலானவை.. ஆனால் அதை உடைத்த ‘அண்ணன்’.. உனக்கானதை இப்படியாக முன்னெடு என்றுரைத்த சக மனிதன் செல்வராகவன்..

உண்மையில் யுகத்துக்கான படைப்பாளன் செல்வராகவன்.. 🙏

நிரப்பி

வெறுமை ஒருபோதும் தன்னிடத்தை வேறொன்றை இட்டு நிரப்பி செல்வதில்லை, எனில் வெறுமை ஒருபோதும் நகர்வதில்லை..
வெறுமை தனது இயல்பிலும் திரிவதில்லை..
போலவே வெறுமை தனது வெறுமையை அழுத்தமாகக்கூட பதிவு செய்வதில்லை..
வெறுமையான ஒரு கவிதையை வெறுமையாக இல்லாமல் புனையக்கூட முடிவதில்லை..

முதலாக இருந்திருக்க வேண்டியது!

ஓடிய நதி ஒட்டிவந்த கழிவுகள் சூழ் கடல்வாயில் என் வாழ்வு..

இதில் பிரித்தரிய ஒன்றுமில்லை, முழுச்சுத்தம் சாத்தியமில்லை..

கடல்கலத்தல் தீர்வாகும்..

ஏனையோரை குறைசொல்ல அதுவொன்றே தீர்வாகும்..